விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு நிலம் வாடகை- வருமானத்திற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு !!
டெல்லி: விவசாயம், காடு வளர்ப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பணிகளுக்கு நிலங்களை வாடகைக்கு அளித்தாலும் அதற்கு சரக்கு மற்றும் சேவை வரி கிடையாது என்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தொடர்பாக ஜிஎஸ்டி சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், இது 1.06.2018 முதல் அமலுக்கு வருவதாகவும், இதன்படி, விவசாயிகள் தங்களின் நிலத்திலிருந்து பெறும் பயன்களுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்தவேண்டும். விவசாயிகள் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும் சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது, தவறாக வழிகாட்டுவது. ஜி எஸ் டி அமலாக்கப்பட்ட ஜூலை 2017லிருந்து விவசாயிகள் தொடர்பாக ஜிஎஸ்டி சட்டத்திலும், வரிவிதிப்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வேளாண்மை, காடு வளர்ப்பு, மீன்பிடித்தல் அல்லது கால்நடை வளர்ப்புக்கு துணையான சேவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விவசாய பணிகளுக்காக வாடகைக்கு அல்லது குத்தகைக்கு நிலம் அளிப்பது மற்றும் பங்குதாரராக விவசாயம் செய்வது உள்ளிட்டவை அனைத்தும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு பெறுவதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் எனப்படுபவர் தனி நபராகவோ அல்லது இந்து முறைப்படி கூட்டு குடும்ப உறுப்பினரோ விவசாயம் மேற்கொண்டால் அதாவது தங்களுக்கு சொந்தமான நிலத்தில் அல்லது வாடகை நிலத்தில் பணியாளர்களை வைத்தோ விவசாயப் பணிகளை மேற்கொள்பவர்கள் விவசாயிகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.