63 நாட்களாக தாய்ப்பால் தானம்! மகனை இழந்த பிறகு இளம் பெண் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு!

விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள நீல்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் சியாரா ஸ்ட்ரேங்ஃபீல்ட். சமீபத்தில் கரு தரித்த சியாராவுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. ஆம், கருவில் வளரும் அவரது குழந்தைக்கு டிரிசோமி 18 எனும் அரிய வகை நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். குழந்தையின் உடல் உறுப்புகளை சிதைக்கக்கூடிய இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக, ஒரு அறுவை சிகிச்சை சியாராவுக்கு செய்யப்பட்டது. இதன்மூலமாக கருவில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தனர்.

இதன்படி, குழந்தையின் உடல்நலம் காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, சியாராவுக்கு அடுத்த சில மாதங்களில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தைக்கு ஏற்பட்ட டிரிசோமி 18 நோயில் எந்த மாற்றமும் இல்லை. குழந்தையின் உடல் உறுப்புகள் நன்கு வளர்ச்சி பெறாத நிலையில், பிறந்து சில மணி நேரங்களிலேயே அது இறந்துவிட்டது. ஏற்கனவே, ஒன்றரை வயதில் சியாராவுக்கு ஒரு மகள் இருந்தாலும், மகனை பார்க்க ஆசையாகக் காத்திருந்த சியாராவின் கனவு கானல்நீராகிவிட்டது.

எனினும், தனது மகனுக்கு தாய்ப்பால் தர முடியவில்லை, தனக்கு தினசரிசுரக்கும் தாய்ப்பாலை தானம் செய்து, வேறு யாரேனும் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற சியாரா தீர்மானித்தார். கடந்த 63 நாட்களாக தனது தாய்ப்பாலை அமெரிக்காவில் உள்ள என்ஐசியூ தாய்ப்பால் சேகரிப்பு வங்கிக்கு தானம் செய்து வருகிறார். அவரது தாய்மைக்குணம் பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.