கிம் ஜாங் வுன் கண்டிப்பாக மரணமடைந்துவிட்டார் என்றே தாம் உறுதியாக நம்புவதாக கூறியுள்ள முன்னாள் வடகொரிய சமூக ஆர்வலர் ஒருவர், இந்த வார இறுதியில் அந்த முக்கிய தகவல் வெளியாகும் என தெரிவித்துள்ளார். வடகொரியாவில் இருந்து ரகசியாம வெளியேறி தற்போது தென் கொரியாவில் வாழ்ந்துவரும் ஜி சியோங்-ஹோ என்பவரே கிம் ஜாங் தொடர்பில் இந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

கடந்த வார இறுதியில், கிம் ஜாங் வுன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்றே அவர் இறந்துவிட்டதாக ஜி சியோங் உறுதிபட தெரிவித்துள்ளார். கிம் ஜாங் மறைவுக்கு பின்னர் கண்டிப்பாக அவரது சகோதரி கிம் யோ ஆட்சிக்கு வருவார் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் வடகொரியாவின் உயர்மட்ட தலைவர்கள் இடையே, பதவிக்கான போர் தொடங்கிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏப்ரல் 11 ஆம் திகதி உயர்மட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கிம் ஜாங் வுன், அதன் பின்னர் இதுவரை வெளியே தலைகாட்டவில்லை. வடகொரிய மக்களுக்கு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் சூரிய விழாவிலும் கிம் ஜாங் பங்கேற்கவில்லை.

கிம் ஜாங் தொடர்பில் சர்வதேச பத்திரிகைகள் வெளியிடும் தகவல்களுக்கு வடகொரியா இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவும் இல்லை. இதனிடையே நீண்ட இரு வாரங்களுக்கு பின்னர் கிம் ஜாங் தமது கையெழுத்திட்ட அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தென் கொரிய பாராளுமன்றத்திற்கு இந்த ஆண்டு தெரிவான ஜி சியோங், உறுதிபட தெரிவிக்கிறார் கிம் ஜாங் இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் மரணமடைந்தார் என்று.
தமக்கு வடகொரியாவில் இருக்கும் நட்பு வட்டம் வழியாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது எனவும் ஜி சியோங் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கிம் ஜாங் உடன் அனைத்து விவகாரங்களிலும் முன் வரிசையில் காணப்படும் அவரது சகோதரி கிம் யோ கண்டிப்பாக வடகொரியாவின் அடுத்த தலைவராக பொறுப்புக்கு வருவார் என ஜி சியோங் தெரிவிக்கிறார்.
