சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து தந்திரமாக தங்கத்தினை கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு இளைஞர்கள் இத்தகைய வேலைகளை செய்து சிக்கிக் கொள்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய லக்கேஜ்களில் ரகசியமாக ஒரு இடத்தை அமைத்து அதன் மூலமாக தங்கம் மற்றும் போதை பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர்.

இருந்தாலும் விமான நிலையங்களில் அதிநவீன பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி கடத்தல் காரர்களை அதிகாரிகள் கண்டுபிடித்து விடுகின்றனர். அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கத்தை வித்தியாசமான முறையில் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமான மூலமாக வந்த நபர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்த பெட்டியை ஸ்கேன் செய்த போது உள்ளே மர்ம உலோகம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஆனால் அப்படி எந்த ஒரு பொருளையும் தான் கொண்டு வரவில்லை என்று அந்த பயணி கூறியுள்ளார். பின்னர் பையின் அடித்தளத்திலிருந்து இரும்பு கம்பிக்கு பின்னால் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். தங்கத்தை ஒயர் போல செய்து அதன் மீது ரோடிய முலாம் பூசப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரிடமிருந்து தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பயனிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2170.3 கிராம். அந்த தங்கத்தின் சந்தை மதிப்பு 1,12,20,451 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.