தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் ஏ ஆர் ரகுமான். ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்து என்ற எல்லையையும் கடந்து ஹாலிவுட் வரை சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.மேலும் இப்படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை இவர் 145 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள நிலையில் ஆறு தேசிய விருது மற்றும் இரண்டு ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் சீக்ரெட் ஆப் சக்சஸ் என்ற பெயரில் மலேசியாவின் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியை டிஎம் ஒய் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள நிலையில் நிகழ்ச்சிக்கான 10,000 டிக்கெட்டுகளும் 11 நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி குறித்து அறிவிப்பை கடந்த வாரம் 10 ஆயிரம் அடி உயரத்தில் வானில் பறந்த படி பாராசூட்டில் இருந்து குதித்து விளம்பரம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை துவங்கி 11 நிமிடங்களில் விற்று தீர்ந்தது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.