அம்மாடியோ இவ்வளவா?….. பட தயாரிப்பாளர்கள் அலுவகங்களில் சிக்கிய பணம் மற்றும் ஆவணங்கள்..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே முக்கிய பிரபலங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் அரசியல் பிரபலங்கள் பலரும் சிக்கினர். இவர்களைத் தொடர்ந்து சினிமா தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்த தொடங்கி விட்டனர்.

அவ்வகையில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பினான்சியர்களுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து வருமானவரித் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான டிஜிட்டல் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் சோதனையின் போது தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களது நெட்வொர்க்குக்கு சொந்தமான ரகசிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. திரைப்படங்களின் உண்மையான வசூலை நாளேட்டில் குறைத்து காட்டி இருப்பது தயாரிப்பு நிறுவனங்கள் வரியைப்பு செய்ததை உறுதிப்படுத்தி உள்ளது.

கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்து தயாரிப்பாளர்கள் திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளனர். முதலில் சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு,எஸ் ஆர் பிரபு மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர் அலுவலகங்களில் தொடர்ந்தது.

இவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 40 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 26 கோடி ரூபாய் ரொக்கம், மூன்று கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் 200 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருவாய் இயற்றியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.