தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்தியா மேனன். இவர் தற்போது தனுசுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நித்யா மேனனுக்கும் மலையாள திரை உலகில் கதாநாயகன் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.

அதற்கு நித்யா மேனன் எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்,எனக்கு திருமணம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியில் முற்றிலும் உண்மை இல்லை. இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மையை சரிபார்க்க ஊடகங்கள் முயல வேண்டும் என நான் விரும்புகிறேன்.

தற்போது எனது வேலையில் மட்டும் நான் முழு கவனத்தை செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலமாக நித்யா மேனன் திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.