இரண்டு நாட்களில் 4 மருத்துவர்களை நாடிய இளைஞர்…. நள்ளிரவில் பரிதாப உயிரிழந்த: கதறும் கர்ப்பிணி மனைவி

கேரளாவின் எடப்பாள் பகுதியில் பெற்றோர் மற்றும் மனைவியுடன் குடியிருந்து வருபவர் 30 வயதான பிரசாந்த். இவரே செவ்வாய் அன்று விடிகாலை நான்கு மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தவர். இரு தினங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி மற்றும் உடல்வலி காரணமாக இவர் எடப்பாளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து நான்கு வெவ்வேறு மருத்துவர்களை நாடியுள்ளார் பிரசாந்த். ஆனால் மருத்துவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பின்னர் வலி நிவாரணி அளித்து அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது பிரசாந்தின் பெற்றோர்கள் விருந்து ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் சென்னை நகருக்கு சென்றுள்ளனர். நிறைமாத கர்ப்பிணீயான மனைவி சில தினங்களுக்கு முன்னரே தாய்வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் பிரசாந்தும் அவரது சகோதரரும் மட்டுமே குடியிருப்பில் இருந்துள்ளனர். திங்களன்று இரவு தூங்கச் சென்ற பிரசாந்த்,  விடிகாலை 3 மணியளவில் நெஞ்சுவலியால் கடுமையாக அவதிப்பட்டுள்ளார்.

உடனே எடப்பாளில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் இளைஞரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பிரசாந்த் திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் பிரசவம் என்பதால் மனைவியை அவரது தாயாரின் வீட்டில் சில தினங்களுக்கு முன்னரே அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.