இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000க்கும் மேல் உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்றுவரை சுமார் 2500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் சமீபத்தில் 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டாக மாற்றப்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப் படுவதற்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திற்கு மாற்றப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ள ஏராளமான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போதிய காற்று வசதி இல்லாததால் எங்களால் இங்கே இருக்க முடியவில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்து தாருங்கள். இல்லை என்றால் வெளியே விடுங்கள் என்று ஏராளமான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூச்சலிட்டு போலீசாரிடம் முறையிட்டனர். போலீசாரும் அவர்களிடத்தில் தூரமாக நின்று பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.