அந்தமான் தீவில் அமெரிக்க இளைஞர் ஆதிவாசிகளால் கொல்லப்பட்ட நிலையில் தீவு குறித்த பேச்சுகள் அதிகரித்திருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் என்பவர் அங்கு வாழும் ஆதிவாசிகளால் அம்பு எய்தி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்தமான் தீவு குறித்த பேச்சுக்கள் உலக மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் வரை அந்தமான் தீவுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 393 சுற்றுலா பயணிகள் வருகை தந்ததுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலில் தெரிய வந்துள்ளது.
இதில் 11,818 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள இயற்கை எழில்சூழ்ந்த இடங்கள், கடற்கரை, ப்ளோரா மற்றும் பவுனா வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இன்னும் வரும் மாதங்களில் இது கணிசமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இங்கு மொத்தமுள்ள 572 தீவுக்கூட்டங்களில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 38 என்பது குறிப்பிடத்தக்கது.