ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளதால் அந்த நாட்டில் அதிக குழந்தைகளை பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். உகாண்டாவில் கபிம்பிரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மரியம் நபாடன்ஸி (40). இவர் தனது சின்னம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.மிகவும் கொடுமைக்காரியான சின்னம்மா, மரியத்துடன் பிறந்த 4 பேருக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டார். இதையடுத்து மரியத்தையும் கொலை செய்ய முயன்றார். அது முடியாமல் போகவே அவரது 12 வயதில் 14 ஆண்டுகள் மூத்தவரான ஒருவரை அதாவது 28 வயதுடைய ஒருவருக்கு மரியத்தை திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் மரியத்துக்கு சந்தோஷமான வாழ்க்கை இல்லை.
தனது 18 ஆண்டுகளை பிரசவத்திலேயே செலவிட்டுள்ளார் மரியம். கணவர் தினமும் குடித்துவிட்டு மரியத்தை அடிப்பதும், தினமும் உறவுக் கொள்வதும் இருந்துள்ளார். இந்த கொடுமைகளுக்கு மத்தியில் பல்வேறு வேலைகளையும் செய்துள்ளார். மரியத்தின் கணவருக்கு பல மனைவிகள் உள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை மரியத்தை பார்க்க வருவார்.மரியத்துடன் குடும்பம் நடத்துவார். குழந்தைகள் விழிப்பதற்குள் எழுந்து சென்றுவிடுவார். மூத்த மகனே 13 வயதில்தான் அவரது அப்பாவை பார்த்துள்ளார். மற்ற குழந்தைகள் அவரை இன்னும் பார்த்தேதில்லையாம்.
25-ஆவது குழந்தை பிறந்த பிறகு மருத்துவரிடம் சென்று கருவை கலைக்க சொல்லியுள்ளார். ஆனால் அவருக்கு ஏராளமான கருமுட்டைகள் வளர்ந்துள்ளதால் கருவை கலைத்தால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.இதையடுத்து தனது 44 ஆவது குழந்தை பிறந்த பிறகு கர்ப்பப்பையையே நீக்கிவிட்டார். 44 குழந்தைகளில் 38 குழந்தைகள் மட்டுமே தற்போது உயிரோடு உள்ளனர். மரியத்தின் கணவர் குழந்தைகளுக்கு எதையும் செய்யமாட்டார்.
இவர்தான் வேலைக்கு சென்று குழந்தைகளுக்கு உணவை வழங்கி வருகிறார். ஒரு நாளைக்கு 10 கிலோ சோள மாவு, 4 கிலோ சர்க்கரை, 3 கட்டி சோப்புகள் வாங்க வேண்டியிருக்கும். கடவுளும் இவர் குழந்தைகள் பட்டினி கிடக்காதவாறு படி அளக்கிறார் என்று கூறுகிறார். மரியத்தின் அப்பாவுக்கும் பல மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.