எனது கணவர் மிகவும் நல்லவர்… காதல் திருமணம் குறித்து அபிராமியின் அதிர்ச்சியான வாக்குமூலம்!

சென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த தாய் அபிராமி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல பின்னணி தகவல்கள் இருப்பதாக போலீஸாரும் மனநல மருத்துவரும் தெரிவித்தனர்.சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலில் தூக்க மாத்திரைகள் கொடுத்து கொலை செய்யப்பட்டனர்.

தற்போது பொலிசாரின் பிடியில் சிக்கிய அபிராமி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஹோட்டலில் வரவேற்பாளராக அபிராமி பணியாற்றினார். அந்த ஹோட்டலில் கடலூரைச் சேர்ந்த விஜய் வேலைபார்த்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.பிறகு இருவீட்டினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வரவேற்பாளராக அபிராமி பணியாற்றியதால் மேக்- அப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அடிக்கடி அழகு நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு அபிராமி வேலைக்குச் செல்லவில்லை. விஜய் மட்டும் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். வார விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விஜய் வெளியில் செல்வது வழக்கம். அப்போது, பிரியாணி கடைக்குச் செல்வார். அந்தக் கடையில் சுந்தரம் என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருக்கும் அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் நாளடைவில் எல்லை மீறியதை அறிந்த இரு குடும்பத்தினரும் அபிராமியைக் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அபிராமி தனது கள்ளக்காதலுடன் கேரளாவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கு இடையூறாக இருந்த குழந்தைகள் அஜய், கார்னிகா, கணவர் விஜய் ஆகியோரை கொலை செய்ய அபிராமி திட்டமிட்டார்.

அதற்காக குன்றத்தூரில் உள்ள மருந்துக் கடையில் தூக்க மாத்திரைகளை வாங்கிய அபிராமி, அதைப் பாலில் கலந்து மூன்று பேருக்கும் இரவு கொடுத்துள்ளார். இதில் கார்னிகா மட்டும் இறந்துவிட்டார். அஜய், விஜய் ஆகியோர் காலையில் எழுந்துள்ளனர். அதைப்பார்த்து அபிராமி அதிர்ச்சியடைந்தாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.வழக்கம்போல விஜய், வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால் அஜய்க்கு மீண்டும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் அபிராமி. அதில் அஜய் இறந்துவிட்டார். இதையடுத்து ஸ்கூட்டியில் வீட்டிலிருந்து கோயம்பேடுக்குப் புறப்பட்டுள்ளார். பிறகு, பணம் இல்லாததால் கோயம்பேடு பகுதியில் உள்ள அடகுக்கடையில் தாலியை விற்று கேரளாவிற்கு செல்லும் போது பொலிசார் அவரைப் பிடித்துள்ளனர்.

இதற்கிடையில் சுந்தரத்தை போலீஸார் பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடினார். அதில் அவரின் இடது கை உடைந்தது. இந்தக் கொலை சம்பவத்துக்குக் காரணமான அபிராமி, சுந்தரம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கணவர் விஜய் குறித்து அபிராமியிடம் விசாரித்தபோது `அவர் ரொம்ப நல்லவர். நான்தான் தவறு செய்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார். சுந்தரத்திடம் போலீஸார் விசாரித்தபோது, `குழந்தைகளை கொலை செய்ய நான் கூறவில்லை’ என்று தெரிவித்துள்ளார். பிரேதப் டாக்டர் ஜனனிபரிசோதனை முடிந்து இரண்டு குழந்தைகளின் சடலங்களும் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டன. அதைப்பார்த்து அவர் மற்றும் அவரின் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து மனநல மருத்துவர் ஜனனி ரெக்ஸிடம் பேசினோம், “பெற்ற குழந்தைகளைக் கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண் துணிந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலில் அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்துவிட்டதே இதற்குக் காரணம்.

அபிராமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், விஜய்க்கு மனைவி என்பதை உணர்ந்திருந்தால் இந்தத் தவற்றை அவர் செய்திருக்க மாட்டார். அவரின் மனசாட்சியை சாகடித்துவிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகும் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்று தெரிவித்துள்ளார்.