ஒரே ஒரு போன் கால்.. சத்தமே இல்லாமல் நடிகர் சத்யராஜ் செய்த உதவி என்ன தெரியுமா? நெகிழ்ச்சி சம்பவம்

நடிகர் சத்யராஜ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்தமே இல்லாமல் உதவியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் கடந்து ஒரு வாரங்களுக்கு மேல் ஆனாலும், பல இடங்களில் இன்னும் நிவாரண உதவிகள் சென்று சேரவில்லை என்றே கூறப்படுகிறது. அரசு அதிகாரிகள், மின் இணைப்பு, சாலைகளைச் சரிசெய்தல் எனத் தீவிரமாகச் செயல்பட, தன்னார்வ அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் தனிநபர்கள் எனப் பலரும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை கொடுத்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தின் உட்புற கிராமங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில், வீட்டின் தரை காய, மின் இணைப்புப் பெற மேலும் 15 நாள்கள் ஆகும் நிலை இருக்கிறது. தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருவதால், நிலையை சீராக்க சிக்கல் நிலவுகிறது. இதனால் அவர்களின் தேவைகள் நேரடியாக சென்றடைவதற்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், குடவாசல் அரசுப் பள்ளி ஆசிரியர் வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், பொருள்களைப் பெற கோயமுத்தூரில் சனி ஞாயிறு தங்கி சேகரிக்கின்றனர். இவர்கள், நடிகர் சத்யராஜ் நண்பரின் மூலம் சத்யராஜை தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது அவர் உதவி என்று கேட்டவுடன் 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து வெங்கட்ராமன் கூறுகையில், ஒரே போனில் எங்களை நம்பி உடனே பணம் அனுப்பிவைத்தார்.

இதே போன்று, அவர் பல பேருக்கு சத்தமில்லாமல் 4 லட்சம் ரூபாய் வரை உதவிசெய்துள்ளார். ஒவ்வொரு பொருளையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்போம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.