தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பவில்லை: ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து கோரும் பிரபலம்

இந்திய மாநிலம் பீகாரின் முக்கிய அரசியல்வாதியான லாலு பிரசாத்தின் மூத்த மகன் திருமணம் ஆன 6 மாதத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவி தம்பதியினரின் மூத்த மகன் தேஜ் பிரதாப்.இவருக்கும், முன்னாள் முதலமைச்சர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யாவுக்கும் இந்த ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி பாட்னா நகரில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் தேஜ் பிரதாப் நேற்று பாட்னாவில் உள்ள நகர சிவில் நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஐஸ்வர்யாவுடன் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பவில்லை. ஏனெனில் இருவருக்கும் இணக்கமாக செல்வதில் பிரச்சினை உள்ளது. எனவே விவாகரத்து அளிக்கும்படி வேண்டுகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பின்னர் ராஞ்சி நகரில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் தந்தை லாலு பிரசாத்தை, தேஜ் பிரதாப் சந்தித்து பேசியுள்ளார்.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.