தருமபுரி மாவட்டம் சோகத்தூரை அடுத்த ஏ.ரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவருக்கு லதா என்ற மனைவியும் வித்யாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். வித்யாஸ்ரீ அருகாமையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.சி முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.மாதையன் வீட்டிற்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேந்திரன் குடும்பத்தாருக்கும் கடந்த சில மாதங்களாகவே நிலத்தகராறு காரணமாக சண்டை இருந்து வந்துள்ளது.இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ராஜேந்திரன் குடும்பத்தாருக்கும், மாதையன் குடும்பத்தாருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ராஜேந்திரன் மகன் நிர்மல்குமார், மாதையன் மற்றும் அவருடைய மகள் வித்யஸ்ரீயை கடுமையாக தாக்கியுள்ளார்.பின்னர் இதுகுறித்து மாதையன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதனை வழக்காக பதியாத பொலிஸார், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பியுள்ளனர்.
ஆனால் இதில் மனமுடைந்து காணப்பட்ட வித்யாஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாதபோது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு வித்யாஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.