MeToo ஹேஷ்டேக் மூலம், சினிமா பிரபலங்களும், செய்தி வாசிப்பவர்களும், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி தைரியமாக தற்போது பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நிருபரான CEO வை ஒரு பெண் டிவி நிருபர் அவரை பேஸ்புக்கில் கிழி கிழி என கிழித்து தொங்க விட்டுள்ளார்.சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்!என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி(CEO), பயங்கர பக்திமான்! பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார்.
அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது.நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது.
ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிரார்த்திப்பேன் என்று!
நான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, எனக்கும் என் காதலனுக்கும் மட்டுமே தெரியும். தொடர்ந்து அதே நிறுவனத்தில்தான் ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன். ஏனென்றால் எனக்கு பணி முக்கியம், என் கெரியர் முக்கியம், தனித்து விடப்பட்டிருந்த எனக்கு பணம் மிக மிக முக்கியம், அதுவே என் பலமும் கூட.
சம்பவம் 2- அதே நிறுவனம் ஒரு கேமராமேன் எனக்கு ஆபாசமாக மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புகிறார். இந்த முறை சுதாரித்துக்கொண்டேன், உடனடியாக நான் என் செய்தி ஆசிரியருக்கு கொண்டுபோய் அதை காட்டினேன். அவர் HR இடம் அனுப்பினார்.
அந்த மெசேஜ்களை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக வேலையைவிட்டு அனுப்பிவிட்டர்கள். ஆனால் அந்த பெண் மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்னை அழைத்து, எப்படி திடிரென உனக்கு அப்படி மெசேஜ் அனுப்புவார், நீ எதுவும் செய்யாமல் அவர் எப்படி மெசேஜ் அனுப்புவார் எனக் கேட்டார். அவர் முன்னால் உட்கார்ந்திருந்த வரை என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை.
இது பற்றி செய்தி ஆசிரியரிடம் சொன்னேன் விடும்மா அவர் அப்படித்தான் என சிம்பிளாக சொன்னார். என்னால் தாங்கமுடியாமல் மிக நீளமாக காட்டமாக அனைத்து உயர் அதிகாரிகளையும் சிசி வைத்து மெயில் போட்டேன், எந்த பதிலும் யாரிடமிருந்தும் வரவில்லை பதிலாக அந்த மாதம் என் சம்பளத்தில் 10000 ரூபாய் பிடிக்கப்பட்டது. ஏதேதோ உதவாத காரணங்கள் சொன்னார்கள், என் நேரடி தலைமைகள் எல்லாம் மௌனியாக இருந்தார்கள். அதற்கு சில காலம் முன்பிருந்தே எனக்கு வேறு ஒரு நிறுவனத்திலிருந்து அழைப்பு இருந்தது. நான் பணியாற்றிய நிறுவனத்தின் மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்ததால் அதிலிருந்து போக மனமில்லாமல் இருந்தேன்.
அங்கிருந்த அற்ப மனிதர்களை வெறுத்ததால் உடனடியாக கிளம்பிவிட்டேன். இங்கும் ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை எல்லாம் இல்லை வேறு வேலை கிடைக்காமல் இருந்திருந்தால் சகித்துக்கொண்டு அங்கேயே இருக்க வேண்டியதுதான். இதுதான் பல பெண்களின் நிலமை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என இந்த சம்பவங்கள் உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஒருவழியாக வேலையை விட்டு வரும் போது அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இது குறித்து சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அப்போதுதான் மன நிம்மதி அடைந்தேன் என பதிவிட்டுள்ளார்