வறுமையின் காரணமாக 25 வருடங்களுக்கு பிறகு தந்தையின் உடலை அடக்கம் செய்த மகன்; அதிர வைக்கும் சம்பவம்

25 வருடங்களுக்கு முன்பு இறந்த ஒருவரை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப வறுமை காரணமாக இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ஜார்ஜ் என்பவர் வேலைக்கு இத்தாலி சென்றார். இதையடுத்து அவர் கடந்த 1994-ம் ஆண்டு மே மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இத்தாலியில் உயிரிழந்தார். அப்போது இலங்கையில் போர் காலம் என்பதால் அவரது உடல் யாழ்ப்பாணம் கொண்டு வருவதில், சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இறந்த ஸ்டீபனின் உறவினர் இத்தாலி அரசின் அனுமதியுடன் உடலை பதப்படுத்தி வைத்தார். ஆனாலும் இந்த தகவலை அவரது குடும்பத்தாரிடம் தெரிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் ஸ்டீபனின் உடலை தாயகம் கொண்டு வரும் அளவிற்கு அவர்களிடம் போதிய பணமில்லை. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 8 ஆம் தேதி ஸ்டீபன் உடல் இலங்கை கொண்டு வரப்பட்டு உறவினர்களின் அஞ்சலிக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து கருத்து கூறியுள்ள ஸ்டீபனின் மகன் ஜூட்சன், ‘எனது அப்பா இறந்த நேரத்தில் இங்கு கடுமையாகப் போர் நடந்தது.

மேலும் உடனே அப்பாவின் உடலை கொண்டு வர போதிய பண வசதி இல்லை. சில வருடங்களுக்கு முன்பு தான் எனக்கு லண்டலில் நல்ல வேலை ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து,

25 வருடங்களுக்குப் பின்பு அப்பாவின் உடலை எங்களது சொந்த மண்ணில் அடக்கம் செய்துள்ளோம். என் அம்மாவின் ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.