உடலில் கயிறு கட்டினார்கள்… வலி இன்றும் உள்ளது… இளமையான நடிகையாக குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வினோதினி ஷேரிங்ஸ்

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை வினோதினியை யாரும் மறக்க முடியாது. இவர் ராட்சசன், கோமாளி, நண்பேண்டா, அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார். இவர் அளித்துள்ள பேட்டியில், சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் உண்டு. குடும்பத்தில் என் வயதுள்ள குழந்தைகளின் தனித் தன்மைகளை கவனிப்பேன். பொதுவாகவே கதை கேட்பதும், கதாபாத்திரங்களை கவனிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.


அதன் தாக்கம்தான் நடிப்புத்துறைக்குள் என்னைத் திருப்பியிருக்கும் என்று நினைக்கிறேன். திரைத்துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ‘நடிகர்கள் எப்போதும் ஏ.சி அறையில்தான் இருப்பார்கள்; ஆப்பிள் ஜூஸ்தான் குடிப்பார்கள்’ என்று பலர் விமர்சிப்பதுண்டு. உண்மையில், ஒரு திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தெருக்களில் எடுக்கப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் வெயிலில் வியர்த்துக் கொட்டும். காலையில் போட்ட மேக்கப் கலையாமல் பார்த்துக்கொள்வதே ஓர் உடல் இயக்கம்தான். ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் நான் பயணம் செய்யும் பேருந்து எதிரே வரும் பேருந்துடன் மோதுவதுபோல ஒரு காட்சி. பேருந்து கவிழ்ந்து விழுவது மாதிரி அந்தக் காட்சியைப் படமாக்கினார்கள்.

பாதுகாப்புக்காக என் உடலில் கயிறெல்லாம் கட்டினார்கள். அப்படியும் முதுகுத்தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. ‘காத்தாடி’ என்ற படத்தில் நடிக்கும்போது சாலை விபத்தில் சிக்கி, உயிரிழப்பதுபோலக் காட்சியமைக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியிலும் பாதுகாப்புக்காக கயிறு கட்டியிருந்தார்கள். அப்படியிருந்தும் மீண்டும் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு இன்றுவரை தொடர்கிறது. சில காட்சிகளுக்கு டூப் நடிகர்களைப் பயன்படுத்துவார்கள். குளோஸ் அப் காட்சியில் அந்தந்த நடிகர்களே நடிக்க வேண்டும். அதனால் விபத்துகளும் காயங்களும் ஏற்படத்தான் செய்யும். இது போன்ற நிகழ்வுகளும் நடிகர்களின் வாழ்க்கையில் சர்வ சாதாரணம் என கூறியுள்ளார்.