அமெரிக்காவில் கீழே கிடந்த சுமார் 135,000 டொலர் பணத்தை, இளைஞன் ஒருவன் நேர்மையாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்த சம்பவம், குடும்பத்தினரை பெருமையடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் New Mexico-வின் Albuquerque-ஐ சேர்ந்தவர் Jose Nuñez Romaniz. 19 வயது இளைஞனான இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தன்னுடைய தாத்தாவிற்கு ஷு வாங்க வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய முயன்றுள்ளார்.

இதனால் அதற்கான பணத்தை ஏ.டி.எம் ஒன்றில் டெபாசிட் செய்வதற்காக Wells Fargo வங்கி கிளையின் அருகே இருக்கும் ஏ.டி.எம்மில் பணம் போட்ட போது, அங்கே எதிர்பாரதவிதமாக பிளாஸ்டிக் பை ஒன்று கிழே கிடப்பதைக் கண்டுள்ளார். அந்த பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்த போது, உள்ளே 50 டொலர், 20 டொலர் என பணங்கள் கட்டுக் கட்டாக இருந்துள்ளது. இதைக் கண்ட அவர் உடனடியாக எடுத்துச் செல்லாமல், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, அதில், சுமார் 135,000 டொலர் இருந்துள்ளது.

இந்த பணத்தை எடுத்துச் சென்றுவிடலாம் என்று எண்ணாமல் அது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த பணத்தை எடுத்து சென்றிருந்தால், அவர் வாழ்க்கை எப்படியோ மாறியிருக்கும், ஆனால் அதை செய்யவில்லை, சரியானதை செய்துள்ளார் என்று காவல்துறையின் செய்தி தொடர்பாளர் சைமன் ட்ரோபிக் கூறியுள்ளார். இது குறித்து அந்த இளைஞன் கூறுகையில், இதைப் பார்த்தவுடன் என் அம்மா ஞாபகம் தான் வந்தது. என் பெற்றோர் எப்போதுமே என் சொந்த வேலை செய்ய எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். திருடப்பட்ட பணம் எந்த நேரத்திலும் நீடிக்காது என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மாணவனின் இந்த செயலைக் கண்டு, அவனின் வீட்டிற்கே சென்று பெற்றோரை பொலிசார் பாராட்டியுள்ளனர். அப்போது அவரின் அம்மா கண்ணீர்விட்டு அழுததுடன், மகனை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். மேலும், இப்படி ஒரு செயலில் ஈடுபட்ட Jose Nuñez Romaniz-ஐ கவுரவப்படுத்தும் விதமாக, Albuquerque பொலிசார் கடந்த வியாழக்கிழமை அகாடமிக்கு வெளியே நடந்த விழாவில் அவரை அழைத்து வந்து விருது கொடுத்து கவுரவப்படுத்தினர்.

குற்றவியல் நீதியைப் படிக்க விரும்பும் Jose Nuñez Romaniz-ஐ காவல் துறையில் பொது சேவை உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளதாக சைமன் ட்ரோபிக் தெரிவித்துள்ளார். கீழே கிடந்த அந்த பணம் ஏ.டி,ஏம்மில் பணத்தை நிரப்ப வந்த போது, தற்செயலாக விட்டு சென்றுவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதைப் பற்றி இன்னும் முழு விபரம் வெளியாகவில்லை.