திருமணம் முடிந்த சில மாதங்களில் புதுமணப்பெண்ணிற்கு வெளிநாட்டில் நேர்ந்த துயரம்: கதறும் குடும்பம்

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற இந்திய யுவதி டர்னர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது. புதனன்று நடந்த இச்சம்வத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ்-ஃபோர்த் பகுதியில் குடியிருக்கும் 27 வயதான ஜெஸ்லின் ஜோஸ் என்பவரே மரணமடைந்தவர். இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் டல்லாஸ்-ஃபோர்த் பகுதியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தமது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்கள் மூவருடன் டர்னர் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் குளிக்க சென்ற ஜெஸ்லின் உள்ளிட்ட நால்வரும் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு மூவரை காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஜெஸ்லினினை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு குழுவினரின் உதவியுடன் ஜெஸ்லினின் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அவரது உடல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சில மாதங்களுக்கு முன்னரே கேரளாவில் வைத்து ஜெஸ்லினுக்கு திருமணம் முடிந்துள்ளது.

கணவரை அமெரிக்காவுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை ஜெஸ்லின் மேற்கொண்டுவரும் நிலையில், ஜெஸ்லின் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் ஜெஸ்லின் குடும்பத்தாரை

உலுக்கியுள்ளது. கேரளாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.