ஹொட்டல் சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறுவது என்ன?

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள நிலையில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஜீவஜோதியின் தாய் அது குறித்து பேசியுள்ளார். 1990களில் இறுதியில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் ஓட்டல் சரவண பவனில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவரின் மனைவி ஜீவஜோதி, கணவரைக் காண சரவணபவனுக்கு வருவார் எனவும் அப்போது அண்ணாச்சிக்கு ஜீவஜோதி மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஜீவஜோதியை அடைவதற்காக பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது. ஜீவஜோதி இதுதொடர்பாகப் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2009-ல் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

கணவர் இறப்புக்கு பிறகு ஜீவஜோதி தண்டாயுதபாணி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவர், பிரவீன் கிஷோர் என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகனுடன் ஜீவஜோதி வசித்து வருகிறார். ஜீவஜோதி வீட்டு அருகிலேயே அவர் தாய் தவமணி வசித்து வருகிறார். ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பேசிய தவமணி.

இப்போது தான் ஜீவஜோதி எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக வாழ்கிறாள். தீர்ப்பு குறித்து அவர் வக்கீல் மற்றும் முக்கியமானவர்களிடம் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார். அதன்பிறகு அவரே இது குறித்து பேசுவார் என கூறியுள்ளார்.