திருப்பூரில் உள்ள பனப்பாளையம் – பெத்தாம்பாளையம் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். ஆடைகள் விலகிய நிலையில் இருந்த அவரின் சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியாமல் இருந்தது. இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 31-ந் திகதி வேலைக்கு சென்ற தங்களது மகள் சுகன்யாவை (25) காணவில்லை என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இறந்த பெண், சுகன்யாவா என்பதை உறுதி செய்ய அந்த பெண்ணின் உடலை கோவிந்தராஜுக்கு பொலிசார் காட்டிய நிலையில்

அது தனது மகள் தான் என அவர் அடையாளம் கூறினார். இது குறித்த விசாரணையில், பனியன் நிறுவன தையல் தொழிலாளியான சுகன்யா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பணியாற்றிய இமானுவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுகன்யா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அனுப்பர்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் அங்கிருந்து பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் தான் கடந்த 31-ந் திகதி
வேலைக்கு போன சுகன்யா மாயமாகி தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராவில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் யார் என பொலிசார் விசாரித்து வருகின்றனர்
