5 வருட காதல்: காதல் மயக்கத்தில் லட்சங்களில் பணத்தை வாரி இறைத்த காதலன்…இறுதியில் காதலி கொடுத்த அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உமாவும், சோதிரிராஜாவும் கார் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் காதல் மயக்கத்தில் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வந்தனர். அப்போது தனது குடும்ப வறுமை குறித்து உமா எடுத்து கூறியதால் வருங்கால மனைவியாக வரப்போகிறவர் என்ற நம்பிக்கையில் தனது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை உமாவின் வங்கி கணக்கில் வாடிக்கையாக செலுத்தி வந்துள்ளார் சோதிரி ராஜா. சில மாதங்களுக்கு முன்னர் உமா பணிக்கு செல்வதை தவிர்த்து விட்டார்.

அப்போதும் உமா மீது கொண்ட தீராத காதலால் தலா 1 சவரன் வீதம் 4 தங்க வளையல்களை வாங்கி பரிசளித்துள்ளார் சோதிரி ராஜா. உமாவின் அழகில் மயங்கி திருமண ஆசையில் 9 சவரனில் தாலி சங்கிலியும் வாங்கி கொடுத்துள்ளார். மொத்தமாக 10 லட்சம் ரூபாய் வரை உமாவுக்கு வழங்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் திகதி முதல் சோதிரி ராஜாவுடன் பேசுவதை நிறுத்தி உள்ளார் உமா. பின்னர் சில தினங்கள் கழித்து சாதியை காரணம் காட்டி வீட்டில் உள்ளவர்கள் காதல் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றும் வேறொருவருடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து தாங்கள் பதிவு திருமணம் செய்து விட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார் உமா.

மேலும் அவரது அழைப்பின் பேரில் நெல்லை ஓட்டல் ஒன்றில் வைத்து நடந்த திருமண வரவேற்புக்கு சென்ற சோதிரி ராஜா , தனது காதலி வேறொருவருடன் ஜோடியாக இருப்பதை கண்டு கலங்கி போனார். அவரிடம் சென்று தான் கொடுத்த பணம் மற்றும் நகையை திரும்பி கேட்டுள்ளார். அதற்கு அவர் பின்னர் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.  ஆனால் அதன் பிறகு செல்போன் நம்பரை மாற்றி உள்ளார் உமா, விசாரித்த போது உமா, பரமசிவனை 2 வதாக காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

உமாவால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சோதிரி ராஜா, காதல் கணவர் பரமசிவனிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். பதிலுக்கு பரமசிவன், சோதிரி ராஜாவை மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து வள்ளியூர் காவல் நிலையத்தில் சோதிரி ராஜா, தனது வங்கி கணக்கு, நகைக்கடை ரசீது உள்ளிட்ட விவரங்களுடன் புகார் அளித்தார். ஏமாற்றிய காதலி உமாவை அழைத்து விசாரித்த காவல்துறையினர் அவரையும், கொலை மிரட்டல் விடுத்த கணவர் பரமசிவனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.