சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. இதனிடையே சிவக்கார்த்திகேயனின் ஆரம்பகால வளர்ச்சிக்கு நடிகர் தனுஷ் முக்கிய காரணமாக இருந்ததாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் மற்றும் 3 படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். அவர்களுடன் அனிருத்தும் இணைந்தார். ஒரு காலகட்டத்தில் எந்த சினிமா நிகழ்ச்சிக்கு சென்றாலும் மூன்று பேரும் ஒன்றாக தான் செல்வார்கள். பின்னர் நாளடைவில் இவர்கள் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் கதை கேட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், திடீரென தனுஷ் ஒரு நாள் என்னிடம் உங்களது அசிஸ்டன்ட் யாராவது காமெடி கதை வைத்திருந்தால் கேளுங்கள் என்று கேட்டார். அதற்கு உங்களுக்கு காமெடி கதைகள் பிடிக்குமா என்று நான் கேட்டேன்.

ஆனால் அவர், அந்தக் கதை சிவகார்த்திகேயனுக்கு தேவை என்று கூறினார். சிவகார்த்திகேயன் திறமையான நடிகர் என்றும் அவரிடம் சூப்பர் ஸ்டார் ஆகும் அளவிற்கு எல்லா தகுதிகளும் திறமைகளும் இருப்பதாகவும் தனுஷ் என்னிடம் கூறினார் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
தனுஷின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் மீண்டும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.