தமிழ் சினிமாவில் இன்று சிறந்த இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தை இளையராஜா போலவே கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு சிறந்த படங்களுக்கு இசையமைத்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இவர் இசைக்காக இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன. இவர் முதன்முதலில் அரவிந்தன் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு சிறந்த தீம் மியூசிக் போட்டு அசத்தியுள்ளார்.

இதனிடையே ரசிகர்களின் ஆசைக்காக அவ்வபோது சில இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் எஸ் எம் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நேற்று மாலை இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே தன்னுடைய insta பக்கத்தில் வெளியிட்ட தகவல் மற்றும் முதலில் வரும் ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி என்ற விளம்பரத்தை பார்த்து சுமார் 10,000 மேற்பட்டோர் அங்கு கூடினர்.

இந்நிலையில் அதிகப்படியான கூட்டம் வந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இருந்தாலும் பலர் கல்லூரியின் சுற்றுச்சூழல் மீது ஏறியும் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பெண் உதவி ஆய்வாளர் பிலோமினா என்பவரும் 5 மாணவர்களும் என ஆறு பேர் காயமடைந்தனர்.

இதனிடையே சுவர் இடிந்ததை கவனிக்காமல் பலர் விழுந்தவர்கள் மீது ஏறி சென்றதால் நெரிசல் அதிகமாகியது.அதன் பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.