சென்னையில் கோடை விடுமுறை முடிவடைந்து கலை மற்றும் கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் நேற்று முதல் தொடங்கப்பட்டது. அதன்படி பச்சையப்பன் கல்லூரி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கோயம்பேட்டில் இருந்து கல்லூரிக்கு மாநகர பேருந்தில் வந்தனர்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேருந்தின் பக்கவாட்டில் தாளம் தட்டியும் பாட்டுப்பாடியும் வந்துள்ளனர். அதனால் அரும்பாக்கத்தில் பேருந்து வந்த போது திடீரென பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சில மாணவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பேருந்தின் முன்புறம் மற்றும் பக்கவாட்டில் நடந்து சென்ற படி பேருந்தை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் . அதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரை கண்டதும் மாநகர பேருந்தை ஊர்வலமாக அழைத்து வந்த கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது. கல்லூரி திறந்த முதல் நாளிலேயே மாணவர்கள் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளன.