இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய படங்களின் பட்டியலில் ஒன்றாக உள்ளது மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம். இதில் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, ரகுமான் மற்றும் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் இரண்டு பாகங்களில் உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளமாகிய மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் மணிரத்தினத்திற்கும்,நடிகர் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோருக்கு வழக்கறிஞர் செல்வம் என்ற நபர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்திய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது என்றும் வரலாற்று உண்மைகள் மறைப்பு இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் படத்தை வெளியிடும் முன்பு படத்தை தங்களிடம் போட்டுக் காட்ட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
