திருவொற்றியூரை சேர்ந்தவர் ஏழுமலை (40). இவரது மனைவி வனிதா (32). தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ம் திகதி வனிதா திடீரென உயிரிழந்து விட்டார். இதையடுத்து ஏழுமலை ஆம்புலன்ஸ் மூலம் வனிதாவின் உடலை தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு எடுத்து சென்றார். அங்கு உறவினர்களிடம் அடிக்கடி ஏற்பட்ட தலைவலியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வனிதா இறந்ததாக ஏழுமலை கூறியுள்ளார். இதை தொடர்ந்து மனைவியை அடக்கம் செய்யும் வேலையில் ஏழுமலை ஈடுபட்டார். ஆனால் வனிதாவின் தந்தை குப்புசாமி, தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக திருவண்ணாமலை பொலிசில் புகார் செய்தார்.

இதையடுத்து பொலிசார் அடக்கம் செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தாக்கப்பட்டதில் வனிதா உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஏழுமலையிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், தனக்கும், தன் மனைவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாகவும், தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த பூரிஉருட்டியால் வனிதாவை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதில் வனிதாவிற்கு உடல்நலக்குறை ஏற்பட்டதால் அருகிலுள்ள மருந்தகத்தில் மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்ததாகவும், ஆனாலும் தொடர்ந்து வனிதாவிற்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென உயிரிழந்து விட்டார்.
பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் சொந்த ஊருக்கு மனைவியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்து மூடி மறைத்து விடலாம் என்று நினைத்ததாக வாக்குமூலம் அளித்தார். இதை தொடர்ந்து பொலிசார் ஏழுமலையை கைது செய்துள்ளனர்.
