ட்யூமருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக பிரபல நடிகையும், பிக்பாஸ் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலியாவார். இந்நிலையில் நேற்று சமூகவலைதள பக்கத்தில் சனம் ஷெட்டி போட்ட பதிவு வைரலானது. அதில், சில மாதங்களுக்கு முன்பு ட்யூமர் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால், அதை அலட்சியமாக விட்டதால் சிக்கலாகி தற்போது இந்த அவசர அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள். என்ன நடந்தாலும் என் பக்கம் இருக்கும் நிற்கும் என் அம்மாவுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பலரும் விரைவில் குணமாகிவிடுவீர்கள் எனப் பதிலளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நான் வீட்டுக்கு வந்துவிட்டேன் என்ற செய்தி உங்களுக்கு மகிழ்வைத் தரும். அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. இன்னும் இரு நாட்களில் நான் மீண்டும் சரி ஆகிவிடுவேன். உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.