அமெரிக்காவில், பிரசவிக்கும் ஒரு பெண்ணின் படம் வைரலாகியுள்ளது. அந்த படம், பெண்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை காட்டுவதற்கு ஆதாரமாக உள்ளதாக உலகெங்குமுள்ள ஏராளமானோரால் பாராட்டுக்களை பெற்றுள்ளது. பெரும்பாலும் கவர்ச்சிப்பொருளாகவே பார்க்கப்படும் பெண்ணின் உடல் எவ்வளவு பெரிய ஆச்சரியம், ஒவ்வொரு முறையும் பிரசவிக்கும் ஒரு பெண்ணின் உடல் எவ்வித அற்புதங்களைச் செய்கிறது, என்பதையெல்லாம் நிரூபிக்கும் வகையில் அந்த படம் விளங்குகிறது. இதில் இன்னொரு அதிசயமும் உள்ளது, ஒவ்வொருமுறை பிரசவிக்கும்போதும், வளைந்து கொடுப்பது பெண் உடல் மட்டுமல்ல, அவள் பிரசவிக்கும் குழந்தையின் உடலும்தான் என்பது மற்றொரு ஆச்சரியம்.

இயற்கையாகவே கருவிலிருக்கும் குழந்தையின் தலை, தாயின் உடலிலிருந்து வெளியேறும்போது, அந்த வழி எவ்வளவு அகலமாக உள்ளதோ, அதே அளவுக்கு தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறது. எனவே, பிரசவம் என்பது தாயும் குழந்தையும் தங்களுக்குள் ஒத்துழைப்பு கொடுத்து செயல்படும் ஒரு அதிசய செயலாக மாறுகிறது. தற்போது மேற்கத்திய நாடுகளில் முழங்காலிட்டு நின்றபடி பிரசவிக்கும் முறை சற்று பிரபலமாகி வருகிறது. இப்படி பிரசவிப்பது சற்று எளிதாக இருப்பதாக தாய்மார்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த குறிப்பிட்ட படத்தைப் பொருத்தவரையில், பெண் பிரசவிக்கும்போது அவரது இடுப்பு எலும்புகள் விலகி குழந்தை வெளியேற உதவியபின், தானாக இணைந்து விடுவது சாதாரண ஒரு நிகழ்வு, ஒவ்வொரு பெண்ணும் அதைக் கடந்துதான் வருகிறாள் என்றாலும், இந்த கோணத்தில்தான் அந்த எலும்புகள் புடைத்து வழி விடுவதை தெளிவாக காணமுடிகிறது.
பயத்தை ஏற்படுத்துவதுபோல் இருந்தாலும், இந்த படத்தை வெளியிட்டுள்ள Louisianaவிலுள்ள Ponchatoula என்ற இடத்தில் அமைந்திருக்கும் Tangi Birth Services என்ற தாய் சேய் மருத்துவமனை, இது சாதரணமான ஒன்றுதான் என்று கூறியுள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவமனை, சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள இந்த படத்தை 50,000க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளார்கள்.
