லண்டனில் தவிக்கிறேன்! என் அம்மா பீதியில் உள்ளார்… ஊர் திரும்ப முடியாமல் உள்ள தமிழ்ப்பட நடிகையின் மகள் கவலை.

பிரபல நடிகை ஜெயமாலாவின் மகள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கித் தவிப்பது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் ஜெயமாலா. இவர் தமிழில் நடித்த பூக்காரி (1973), ஜம்போ, பாமா ருக்மணி, கண் சிவந்தால் மண் சிவக்கும், படிக்காத பண்ணையார் போன்ற படங்கள் இன்றும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இவரது மகள் சவுந்தர்யா. இவரும் நடிகைதான். கன்னடத்தில் காட்ஃபாதர், பாரு ஒய்ஃப் ஆப் தேவதாஸ், சிம்மாத்திரி ஆகிய படங்களில் நடித்தார். பிறகு நடிக்காமல் இருந்த அவர், பிரித்தானியாவில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்து வருகிறார். இப்போது கொரோனா காரணமாக, இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். சக மாணவிகளுடன் அவர் தங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், கொரோனா பீதி உலகம் முழுவதும் பரவியதை அடுத்து, மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்த உள்ளதாக எங்களுக்கு 21 ஆம் திகதி கூறப்பட்டது.

உடனடியாக கடைசி விமானத்தில் துபாய் வழியாக பெங்களூர் செல்ல புறப்பட்டோம். துபாய் வந்து இறங்கிய போது பிரித்தானியாவில் இருந்து வரும் மாணவர்களை அனுமதிக்க இந்தியா மறுத்துவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. திரும்ப லண்டன் திரும்பிச் செல்வதற்கான டிக்கெட் கட்டணமும் அதிகமாக இருந்தன. அதே நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் சமூக விலகலைக் கடைபிடிக்க முடியவில்லை.

கடுமையானக் கூட்டம். பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பலர் தவித்தபடி இருந்தனர். அது ஏதோ அகதி முகாம் மாதிரி இருந்தது. ஒரு நாள் முழுவதும் அங்கு தூங்காமல் இருந்தோம். பின்னர் தூதரகம் எங்களுக்கு உதவ வந்தது. லண்டனுக்குத் திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டோம்.

அதன்படி லண்டனுக்குத் திரும்பினோம்.இப்போது குவைத்தை சேர்ந்த தோழி ஒருவர், சாப்பாட்டுக்கும் மற்ற விடயங்களுக்கும் உதவிக் கொண்டிருக்கிறார். லண்டனில் நான் தவிப்பதை பார்த்து என் அம்மா பீதி அடைந்திருக்கிறார். முதலிலேயே அவர் என்னை ஊருக்குத் திரும்பும்படி கூறியிருந்தார். அதற்குள் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.