வாழ்க்கையில் இனி பாடுவதில்லை என முடிவெடுத்த அந்த கணம்: மனம் திறக்கும் பிரபல பின்னணி பாடகி சித்ரா

புற்றுநொயால் அவதிப்படும் தந்தையின் கண்ணீரை தாங்கிக்கொள்ள முடியாமல், இனி வாழ்க்கையில் பாடுவதில்லை என முடிவெடுத்ததாக பிரபல பின்னணி பாடகி சித்ரா மனம் திறந்துள்ளார். தனது தந்தை குறித்து மனம் திறந்துள்ள பாடகி சிதரா, அவரது பொறுமை மற்றும் தியாகமே தனக்குள் இருக்கும் பாடகியை வெளிக்கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். கேரளாவில் பிரபல மேடைப்பாடகராக வலம்வந்த கிருஷ்ணன் நாயர் என்பவரின் மகள் தான் பின்னணி பாடகி சித்ரா. ஒருகட்டத்தில் ஆசிரியர் பணிக்கு சென்றுவிட்ட கிருஷ்ணன் நாயர் தமது மகளை பாடகியாக காண வேண்டும் என்ற ஆசையில் அவரை இசை கற்க வைத்துள்ளார். பின்னர் நாடக மேடைகளில் பாடிய சித்ரா, தொடர்ந்து திரைப்படங்களிலும் பாடத்துவங்கியுள்ளார்.

பெரும்பாலும் மலையாள மொழிப்படங்கள் தமிழகத்தின் சென்னையிலையே பதிவு செய்யப்பட்டு வந்த காலகட்டத்தில், சித்ரா, கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்து பாடல் பாடிவிட்டு செல்வது வழக்கம். இந்த காலகட்டத்தில் அவரது தந்தை, சித்ராவின் கூடவே துணைக்கு வந்து போயுள்ளார். இசையில் நுணுக்கங்கள் தெரிந்த கிருஷ்ணன் நாயர், மகள் பாடுவதை அருகில் இருந்து உற்சாகப் படுத்தியும் வந்துள்ளார். சம்பவத்தன்று கங்கை அமரன் இசையில் ஒரு மலையாள படத்திற்கு பாடல் பாடும் வாய்ப்பு சித்ராவுக்கு அமைந்துள்ளது. சித்ரா பாடல் பாடிக்கொண்டு இருந்துள்ளார். துணைக்கு வந்த தந்தை எப்போதும் போல அறைக்கு வெளியே காத்திருந்துள்ளார்.

அவருக்கு புற்றுநோய் பாதித்து மிகவும் அவஸ்தை பட்டுவந்த காலகட்டம் அது, சிகிச்சை மேற்கொண்டு, ஓய்வெடுத்துக்கொள்ள சித்ரா மன்றாடிக் கேட்டும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என சித்ரா நினைவுகூர்ந்துள்ளார். அன்றைய தினம், தந்தையின் அந்த நிலை கண்டு மிகவும் வருந்தியதாக கூறும் சித்ரா, இந்த நரக நாடகள் இனி தேவை இல்லை எனவும், வாழ்க்கையில் இனி பாடுவதாக இல்லை எனவும் ஒருகணம் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாடல் பதிவு முடிந்த உடனையே, தந்தையை அழைத்து வெளியே வந்த அவர், இதுவரை பாடல்கள் பாடியது போதும், தந்தையின் வலியை தாங்கிக்கொள்ளும் வலிமை தமக்கு இல்லை எனவும் கூறி அழுதுள்ளார்.

பின்னர், அன்றைய நாள் பாடுவதாக இருந்த பாடல் பதிவுகளை வேறொரு நாளுக்கு மற்றிவிட்டு, இருவரும் கேரளா திரும்பியுள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கிருஷ்ணன் நாயர் இறப்பதற்கு முன்னர், தமது மகளிடம் மீண்டும் பாடல்கள் பாட ஒப்புதல் வாங்கியுள்ளார். தந்தையின் மறைவுக்கு பின்னர், அவருக்கு அளித்த வாக்குறுதிப்படி சித்ரா மீண்டும் பாடல்கள் பாட முன்வந்ததும் பல விருதுகளை குவித்ததும் வரலாறு.