கோவையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் 25ம் திகதி வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது மாயமான 6 வயது சிறுமி, செவ்வாய்கிழமை சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு சந்து பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி கொல்லப்படுவதற்கு முன் கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது. தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வழக்கில் சந்தோஷ் என்கிற 34 வயது நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அங்கு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் குற்றவாளி குறித்து கோயம்புத்தூர் பொலிஸ் துணை கண்காணிப்பாளர் மணி கூறுகையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து மனைவியை பிரிந்து விட்டார். வயது முதிர்வு காரணமாக பண்ணிமடையில் தனியாக வசித்து வந்த பாட்டியின் வீட்டிற்கு 3 மாதத்திற்கும் முன்பாக வந்து தங்க ஆரம்பித்துள்ளார்.
அவருடைய பாட்டி இறந்த அன்று தான் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுமியை கடத்தி கொண்டு தன்னுடைய வீட்டில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் சிறுமி பலத்த காயமடைந்ததை அடுத்து அவரை கொலை செய்து, அதிகாலை தூக்கி எறிந்துள்ளார்.
சந்தோஷ் ஏற்கனவே இரண்டு மூன்று முறை சிறுமியிடம் அத்துமீறியிருக்கிறார். இது அவருடைய பாட்டிக்கு தெரியவந்திருக்கிறது. ஆனால் அவருடைய இறப்பு இயற்கையானதாகவே தெரிகிறது. ஏனெனில் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.