‘சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா’- ஏணியாக உதவிய கேப்டனை மறந்த நடிகர்

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் முன்னணி நாயனாக வலம் வந்தவர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நடிப்பதைக் குறைத்துக்கொண்ட விஜயகாந்த், தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தமிழக அரசியலில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றார். சில ஆண்டுகளாக உடல் நலமின்றி , வீட்டில் ஓய்வில் இருக்கிறார். கட்சிப் பணிகளை அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில், அவரது படங்கள் எதிர்பார்த்த அளவில் பேசப்படவில்லை. விஜய் ஹீரோவாக அறிமுகமான ’நாளைய தீர்ப்பு’ படமும் தோல்வியடைந்தது. பெரிய ஹீரோக்களில், ஒருவருடன் நடித்தால், விஜய்க்கு நல்ல பெயரும், தமிழ் சினிமாவில் அறிமுகமும் கிடைக்கும் என, விஜயின் தந்தை, டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர் திட்டமிட்டார்.. ஆனால், முன்னணி ஹீரோக்கள் பலரும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தனர்.

அதே போல், விஜயகாந்த்தும் தனது படங்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்தார் இந்நிலையில் சந்திரசேகரின் விருப்பத்தை அறிந்த விஜயகாந்த், அவரது வீடு தேடி வந்திருக்கிறார். விஜய் உடன் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் விஜய்காந்த் தின் தம்பியாக விஜய் நடித்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. முன்னணி நடிகராக தற்போது இருக்கிறார். ஆனால், ஆண்டுக்கணக்கில் உடல்நலம் பாதித்த நிலையில் உள்ள விஜயகாந்த்தை நேரில் சென்று நலம் விசாரிக்க, நடிகர் விஜய் முன்வரவில்லை. தன் சினிமா வளர்ச்சிக்கு விஜயகாந்த் செய்த மாபெரும் உதவியை மறந்துவிட்டார் என, நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு நேர்காணலில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.