நடிகர் பகத் பாசில், மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். இவர் தமிழில் அறிமுகமான முதல் படம், வேலைக்காரன். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படத்தில், வில்லனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு, ரசிகர்களின் கவனத்தை ஈர்ககும்படி இருந்தது. அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில், நடித்திருந்தார். மிகச்சிறப்பான கேரக்டராக அது அவருக்கு அமைந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் பகத்பாசில், நடிப்பில் மிரட்டி இருந்தார்.மலையாளத்தில் பிரபல இயக்குநராக உள்ள பாசில் மகன்தான் பகத் பாசில். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, நதியா நடித்த பூவே பூச்சூடவா, சத்யராஜ் நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே போன்ற மிகச் சிறந்த படங்களை, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தவர்தான் இயக்குநர் பாசில். அவரது மகன் பகத் பாசில், தந்தை பாசிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிக்க இவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகிறது.இவரது மனைவி நஸ்ரியா, இவரும் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். ராஜா ராணி, நேரம், வாயை மூடி பேசவும், நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். ஆனால், இவரது கணவர் பகத் பாசிலுக்கு கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும் தமிழ் படங்களில் நஸ்ரியாவுக்கு கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்க பலகட்டங்களில் அவர் முயற்சித்தும், எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, நஸ்ரியா இப்போது தமிழில், சென்னையில் தயாராகி வரும் ஒரு வெப்சீரிஸ்சில் நடித்து வருகிறார்.