சந்திரமுகி 2 படத்தில் காணாமல் போன 480 காட்சிகள் – இயக்குநர் பி. வாசு வெளியிட்ட திடுக் தகவல்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம்தான் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, மாளவிகா, வினீத் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும், வடிவேலுவின் அட்டகாசமான காமெடி நடிப்பும் வெகுவாக ரசிக்கப்பட்டது. படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஆக ஹிட் ஆனது.இப்போது, இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் சந்திரமுகி 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, ரவி மரியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம், வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில், இப்படத்தை வெளியிட வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. படத்துக்கான பிரமோஷன் பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன.

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் இயக்குநர் பி.வாசு ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து, படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது திடுக்கிடும் ஒரு தகவலையும் வெளியிட்டார். சந்திரமுகி படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15ம் தேதியே வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஒரு வாரம் முன்னதாக 8ம் தேதி இரவு என்னை அழைத்தவர்கள், படத்தில் எடுக்கப்பட்டிருந்த 480 காட்சி (ஷார்ட்)களை காணவில்லை என்று கூறினா். இதைக்கேட்ட எனக்கு பயங்கர அதிர்ச்சியாகி விட்டது.அதன்பின், படம் ரிலீஸ் தேதி 15 என்பதில் இருந்து, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது, படத்தில் இருந்து காணாமல் போன அந்த 480 காட்சிகளும், நான்கைந்து நாட்களில் மீட்டெடுக்கப்பட்டது. இதனால் தான் திட்டமிட்ட தேதியில் இருந்து 2 வாரங்கள் கழித்து, சந்திரமுகி 2 வெளியாகிறது என, பி.வாசு தெரிவித்துள்ளார்.