இயக்குநர் பாலா பெயரில் மோசடி; போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, அவன் இவன் என சிறந்த வெற்றி படங்களை தந்தவர்.அடுத்து, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ என்ற படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குநர் பாலா, சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
இன்ஸ்டாகிராமில் எந்த கணக்கும் எனக்கு இல்லை. ஆனால், போலியான நபர்கள் எனது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு உருவாக்கி புகைப்படங்கள், தகவல்களை அனுப்பி வருகின்றனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக குறுஞ்செய்திகள் அனுப்பி, இளம்பெண்களிடம் தவறான நோக்கத்தில் பேசி இருக்கின்றனர்.

மேலும், அந்த பெண்களிடம் கவர்ச்சி புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளனர். எனது படங்களில் நடிக்க, சம்பந்தப்பட்டவர்களை எனது உதவி இயக்குநர்கள், மேலாளர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதுதான் வழக்கம். இப்படி குறுஞ்செய்திகள் அனுப்புவதில்லை,

அதனால், சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டவர்கள், இதுபோன்ற போலியான நபர்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்கை முடக்க வேண்டும் எனவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.