ஒரு கோடி ரூபாய் சம்பளம் போடச் சொன்ன நடிகர்; நெகிழ்ந்து போன நடிகர் திலகம்

கருப்பு- வெள்ளையில் தமிழ் படங்கள் வந்த அந்த காலத்தில் நடித்த ஹீரோ நடிகர்களின் சம்பளம் சில ஆயிரங்கள் தான். பல ஆண்டுகளுக்கு பிறகுதான், அது சில லட்சங்களாக மாறியது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிப்புத்திறமை இருந்தும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பளமாக பெற்றது சில லட்சங்கள்தான். இதனால், 1980ம் ஆண்டுக்கு பிறகு, தயாரிப்பாளர் விரும்பும் சம்பளத்தை தந்தால் போதும் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் விஜய் உடன் சிவாஜி நடித்தார். அப்போது, படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஏ சந்திரசேகர் 100 ரூபாய் மட்டுமே அட்வான்ஸ்சாக சிவாஜிக்கு கொடுத்தார். படம் ரிலீஸ் ஆனபின், ரூ. 10 லட்சம் சிவாஜிக்கு சம்பளமாக கொடுத்திருக்கிறார். இதைப் போலவே, நடிகர் கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ படத்தில் நடித்ததற்காக, சிவாஜி கணேசனுக்கு தந்த சம்பளம் ரூ. 20 லட்சம்.

அடுத்து, சிவாஜி இறப்பதற்கு முன்பு, ரஜினியுடன் ‘படையப்பா’ என்ற படத்தில் நடித்தார். இதற்காக, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சம்பளமாக ஒரு கோடி ரூபாய் செக், சிவாஜி கணேசனுக்கு தரப்பட்டது. இதையறிந்த சிவாஜி கணேசன், ரூ. 10 லட்சம் என்பதற்கு, தவறுதலாக ஒரு ஜீரோ கூடுதலாக போட்டு, ஒரு கோடி ரூபாய் என தவறாக செக் அனுப்பி இருப்பார்களோ, என சந்தேகப்பட்டுள்ளார். உடனே, தயாரிப்பாளருக்கு போன் போடச் சொல்லி பேசி இருக்கிறார். ஆனால், இந்த படத்தில் ஒரு கோடி ரூபாய் உங்களது சம்பளம். உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்குமாறு, ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ளனர். உடனடியாக ரஜினிக்கு, சிவாஜி கணேசன் தரப்பில் இருந்து, நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.