ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் சில விமர்சனங்களையும் சந்தித்தது.

அது மட்டுமல்லாமல் லஷ்மி ராமகிருஷ்ணன் பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் முக்கிய விவாதங்களை எழுப்பியது. அதாவது இவர் மேல் தட்டு வருக அரசியலை தூக்கி பிடிக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இவர் தற்போது புதிதாக ஒரு படம் இயக்க உள்ளார். அந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார். இது தொடர்பாக அவரை லட்சுமி ராமகிருஷ்ணன் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றபோது இளையராஜா லட்சுமி ராமகிருஷ்ணனை தரையில் அமர வைத்துள்ளார்.

அவர் மேலே நாற்காலியில் அமர்ந்து கொண்டு இவரை கீழே அமர வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் பெரும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.தன்னை சந்திக்க வரும் விருந்தினருக்கு நாற்காலி கொடுக்கும் அளவிற்கு கூட இளையராஜாவிடம் பணம் இல்லையா என்று விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இதற்கு பதில் அளித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், “இளையராஜா எனக்கு கடவுள் போன்றவர். அவரின் பாதத்தின் அடியில் அமர்வது எனக்கு கிடைத்த பாக்கியம். தரையில் அமர்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது”என்று அவர் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் கொடுத்துள்ளார். இருந்தாலும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.