நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறது -தமிழ் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட கன்னட நடிகர் சிவராஜ்குமார்

கன்னட சினிமாவில், முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். சமீபத்தில், ஜெயிலர் படத்தில் ரஜினியின் நண்பராக நடித்திருந்தார். இவரது நடிப்பை தமிழ் ரசிகர்களே கொண்டாடும் அளவுக்கு, மிகச் சிறப்பாக நடித்திருந்தார், இரண்டு காட்சிகளே வந்தாலும், மாஸ் காட்டியிருந்தார். இப்போது, கர்நாடகாவில் காவிரி நீர் குறித்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று கடையடைப்பு, பந்த் நடத்தப்பட்டது. 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கன்னட அமைப்பினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.தமிழ் சினிமாவில், இளம் நடிகர்களில் ஒருவரான சித்தார்த், சித்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. கன்னட மொழியில் வெளியாகும் சித்தா படத்துக்காக, பெங்களூருவில் நடந்த பிரமோசன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு திடீரென வந்த கன்னட அமைப்பினர், காவிரி பிரச்னையில் இங்கு போராட்டங்கள் நடந்துவரும்போது, இதுபோன்ற நிகழ்ச்சி தேவையில்லாதது என கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்து சித்தார்த் வெளியேறி விட்டார். இது இணையத்தில் வைரலானது.இதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ்ராஜ் வருத்தம் தெரிவித்த நிலையில், அடுத்து கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். சித்தா பிரமோசன் நிகழ்ச்சியில், செய்தியாளர் சந்திப்பில் இருந்த நடிகர் சித்தார்த்தை, வலுக்கட்டாயமாக அங்கிருந்து கன்னட அமைப்பினர் வெளியேற்றிய செயலுக்கு, நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி ஒரு சம்பவம் நடந்தது, எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. கன்னட மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள். அனைத்து மொழி படங்களையும் விரும்பி பார்ப்பவர்கள், என்று அவர் பேசிய வீடியோ, இப்போது வைரலாகி வருகிறது.