தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் தான் நடிகர் நாசர். இவரின் நடிப்புக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு படங்களில் தனது நடிப்பின் திறமையை அபூர்வமாக வெளிப்படுத்தியவர்.

முதன் முதலில் கல்யாணம் அகதிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிப்பதையும் தாண்டி டைரக்டர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நாடக நடிகர்,நடிகர் சங்க தலைவர் மற்றும் அரசியல்வாதி என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவிலும் நடித்து பிரபலமானவர். பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ள இவர் தற்போது ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென விபத்தில் சிக்கிய நிலையில் உடனடியாக படக்குழுவினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை நலமாக இருப்பதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.