பாகுபலி, கேஜிஎப், பொன்னியின் செல்வன் என, தொடர்ந்து பல படங்கள் இரண்டு பாகங்களாக வெளிவந்தன. இந்த ஆண்டில் அடுத்தடுத்து 2ம் பாக படங்கள் வர உள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் டிமாண்டி காலனி 2, தனி ஒருவன் 2 என படங்கள் தயாராகி வருகின்றன. அதுபோல், இயக்குநர் பி. வாசு இயக்கிய, டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படம், வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.சந்திரமுகி 2ம் பாகம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன், பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. இதில் ரஜினி, பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, சோனு சூட், செம்மீன் ஷீலா மாளவிகா, வினீத், கேஆர் விஜயா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அந்த படத்தில் நடித்த வடிவேலு ஒருவரை தவிர வேறு யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை. வடிவேலு மட்டுமே முருகேசன் என்ற அதே கேரக்டரில், சந்திரமுகி 2 பாகத்திலும் நடித்திருக்கிறார்.சந்திரமுகி 2 படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் பேசிய போது, சந்திரமுகி படத்தில் ரஜினி சார் நடிப்பை, யாராலும் நடித்துவிட முடியாது. அப்படி நினைப்பது கூட தவறு. ஏனெனில் அந்த நடிப்பும், ஸ்டைலும் அவரால் மட்டுமே முடியும். மாமன்னன் படத்தில் வடிவேலு அழுதால், நாமும் அழுவோம்.
ஆனால், இந்த படத்தில், வடிவேலு அழுதால் நாம் எல்லோரும் சிரிப்போம், என்று ஜாலியாக பேசி இருக்கிறார். மேலும் அன்று ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்துக்கும், 2ம் பாகமாக வரும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அது வேற படம், இது வேற படம், டைட்டில் தான் ஒன்றாக இருக்கிறது என்று கூறி ரசிகர்களை குழப்பத்தில் தள்ளியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.