கடந்த 1980, 90 களில் தமிழ் சினிமாவில் ராமராஜன் படங்கள் என்றாலே, தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். கிராமத்து மக்களின் வாழ்க்கை கதைகளை பின்னணியாக கொண்ட அவரது படங்களை மக்கள், மிகவும் ரசித்தனர். யதார்த்தமான கதாபாத்திரங்களும், அவர்களது இயல்பான நடிப்பும், வசனங்களும், மென்மையான பாடல்களும், கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டதால், ராமராஜன் படங்கள், 100 நாள் ஓடிய வெற்றி விழா படங்களாக கொண்டாடப்பட்டன.ராமராஜன் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற மற்றொரு முக்கிய காரணம், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும்தான். ராமராஜன் படங்களின் பாடல்கள், என்றென்றும் ரசித்து, ரசித்து கேட்கப்படுகிறது. அந்த அளவுக்கு, தேனில் விழுந்த பலாச்சுளையாக ரசிகர்களுக்கு அந்த பாடல்கள் இனிக்கின்றன. ராமராஜனின் நடிப்பில் வெளியான பல வெள்ளி விழா படங்களுக்கு இசையமைத்தது எல்லாமே இளையராஜாதான்.மீண்டும் தமிழ் சினிமாவில் ராமராஜன் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். விரைவில், சாமானியன் என்ற ராமராஜன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கு, நிச்சயம் இசைஞானி இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார் ராமராஜன். அதனால், இளையாராஜா இசையில், சாமானியன் படம் ரிலீஸ் ஆகிறது.
இதுதவிர, மற்றொரு புதிய படத்தில் நடிக்க, ராமராஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அந்த படத்தில் இசையமைக்க, இசையமைப்பாளர் ஜிப்ரானை படத்தின் தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஜிப்ரானிடம் இதுகுறித்து பேசி, அவருக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் என முடிவானது.ஆனால், இந்த தகவலை அறிந்த ராமராஜன், என் படத்துக்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறி இருக்கிறார். வேறு வழியின்றி அதற்கு ஒத்துக்கொண்ட தயாரிப்பாளர், இளையராஜாவிடம் பேசி, அவரது சம்பளம் ஒரு கோடி ரூபாய் என்று முடிவாகி உள்ளது. இதனால், கூடுதலாக ரூ.60 லட்சம் தயாரிப்பாளருக்கு செலவு ஏற்படுத்தி விட்டார் ராமராஜன்.