தமிழ் சினிமாவில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரே மாதிரியான படங்கள் தொடர்ந்து வெளிவரும். உதாரணமாக கரகாட்டக்காரன் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, சில ஆண்டுகளுக்கு அதே போன்ற கிராமத்து கதைகளில், கிளைமேக்ஸில் தீ மிதிக்கும் பாடல் காட்சிகளுடன் படங்கள் அதிகமாக வந்தன. நாட்டாமை படம் வந்த பிறகு, அதே மாதிரியான படங்கள் தொடர்ந்து வந்தன. அதுபோல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக, ஸம்மர் சீசன் போல, பேய் படங்களாக வந்துக்கொண்டு இருக்கின்றன.அந்த வகையில் பேய் படங்களுக்கான பூஜையை போட்டு முதலில் துவக்கி வைத்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்தான். அவர்தான் முதன்முறையாக முனி படத்தை ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு காஞ்சனா 1,2,3, 4 என தொடர்ச்சியாக பேய் படங்களாக தந்துக்கொண்டு இருக்கிறார். அதுபோல், இயக்குநர் சுந்தர் சி அரண்மனை 1,2,3 படங்களை அடுத்தடுத்த பாகங்களாக தருகிறார். இதை போலவே, சந்திரமுகி படத்தை தந்த இயக்குநர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படமும், சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், உண்மையிலேயே பேய் என்றால் பயப்படுவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், படங்களில் பேய் வருவது போன்ற காட்சிகளை பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஆனால் வீட்டில் பாட்டி, அம்மா, மாமா என ஆளாளுக்கு ஒரு பேய் கதை சொல்வார்கள். அந்த கதைகள் நீண்டுக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில், கதை சொல்பவர்களுக்கே பயம் வந்து, கதையை நிறுத்தி விடுவர். அதுபோன்ற நாட்களில் தூங்க போகும்போது பயமாக இருக்கும். அதனால், விளக்கை அணைக்காமல், இன்று விளக்கு எரியட்டுமே, என வெளிச்சத்தில் படுத்து தூங்கி விடுவேன், என யதார்த்தமாக கூறி இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.