நடிகர் சூரி, காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். வெண்ணிலா கபடிக்குழு படத்தில், பரோட்டா சாப்பிடும் போட்டி, காமடெி காட்சியில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து பல படங்களில், காமெடி ரோல்களில் அசத்தினார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் சூரி நடித்த பல படங்கள், நல்ல வரவேற்பை பெற்றதால், சூரிக்கு முன்னணி காமெடி நடிகர்கள் வரிசையில் இடம் கிடைத்தது.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், ‘விடுதலை’ படத்தில், முதன்முறையாக சூரி கதாநாயகனாக நடித்தார். குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் சூரி, பக்குவமான நடிப்பை தந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதுவரை காமெடி ரோல்களில் மட்டுமே சூரியை ரசித்த ரசிகர்கள், விடுதலை படத்தில், போலீஸ் ஜீப் டிரைவாக, மலைவாழ் பெண்ணை காதலிக்கும் ஒரு பாத்திரத்தில் சூரியின் பண்பட்ட நடிப்பை பாராட்டினர். இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ள விடுதலை படத்தின் 2ம் பாகத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், சூரி மீண்டும் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன், இந்த படத்துக்கு கதை எழுதி இருக்கிறார். துரை செந்தில்குமார் இயக்கும் இந்த புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. சசிக்குமார், சமுத்திரக்கனி,மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஹீரோ கேரக்டர்களில் சூரி நடிப்பதால், இனி காமெடி ரோல்களில் நடிப்பாரா என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நல்ல படங்களில் ஹீரோ வேடம் கிடைத்தால், அதில் நடிப்பதில்தான் நடிகர்கள் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.