ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்தான நீச்சல் குளம்! சிறுவன் உயிர் குடித்த பயங்கரம்!

ஐதராபாத்தில், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பின் நீச்சல் குளத்தில் 6 வயதுச் சிறுவன் தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளான். இந் நிலையில் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு காரணமான குடியிருப்பு நிர்வாகம், காவலாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் கேட்டட் கம்யூனிட்டி என்ற பெயரிலான ஆடம்பரம் வசதிகளுடன் கூடி ஆடம்பர அடுக்கு மாடிக் குடியிருப்புகள் அதிகம். இங்கு சொகுசு வசதிகளுடன் குழந்தைகள் உள்ளிட்டோரின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்படுவதால் வசதிபடைத்தவர்கள் பலரும் இத்தகைய குடியிருப்புகளை நாடுகின்றனர். ஆனால் வாய் வார்த்தையாக வாக்குறுதிகளைக் கொடுத்து  குடியிருப்புகளை விற்று விட்டு பாதுகாப்பு வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஐதராபாத்தின் நல்லகண்ட்லா என்ற இடத்தில் ம்ஞ்சீரா டைமண்ட் டவர்ஸ் என்ற ஆடம்பரக் குடியிருப்பு ஒன்றின் நீச்சல் குளம் அருகே கடந்த 4-ஆம் தேதி 6 வயதுச் சிறுவனான வசிஷ்ட் அங்குள்ள நீச்சல் குளத்தின் ஓரத்ஹில் நின்று, குளத்துக்குள் ஒரு  பொருளைத் தூக்கியெறிந்து  விளையாடுவதும் அப்போது குளத்துக்குள் தவறிவிழுவதுமான காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன. சிறுவன் தவறி விழுந்ததை, அங்கு பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும் காவலர்களோ, நிர்வாகத்தினரோ கவனிக்காத நிலையில் சிறுவனின் கதறலும் எவர் காதிலும் விழவில்லை

இந்நிலையில் சிறுவன் தண்ணீரில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்ததை  அந்த வழியாகச் சென்ற சிலர் கண்டு உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 6-ஆம் தேதி சிறுவன் வசிஷ்ட் உயிரிழந்தான். இந்நிலையில் நீச்சல் குளம் அருகே பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியில் இல்லாத ஊழியர்கள், அவர்கள் இருப்பதை உறுதிப்படுத்தத் தவறிய நிர்வாகத்தினர் ஆகியோர் மீது சிறுவனின் பெற்றோர் புகா அளித்தனர். ஆனால் 10 நாட்களுக்குப் பிறகும் போலீசார் எவர் மீதும் வழக்குப் ப்திவு செய்யவோ கைது செய்யவோ இல்லை.

பெற்றோர் ஊடகங்களை அழைத்து குற்றம்சாட்டிய நிலையில் இன்னும் தடயங்களை தேடிக் கொண்டிருப்பதாக போலீசாரிடம் இருந்து பதில் வந்தது. இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் ஊடகங்களை அழைத்ததைத்தொடர்ந்து போலீசார் தற்போதுதான் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குடியிருப்புகளுக்குள் இருக்கும் நீச்சல் குளங்களை வரைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.