“தேன்மொழி.. என்கிட்ட பேசமாட்டியா”..! ஈவு இரக்கமே இல்லாமல் சரமாரியாக வெட்டிய சுரேந்தர்..! பின் நடந்தது என்ன?

ஈரோட்டைச் சேர்ந்தவர் தேன்மொழி (25). இவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் இவர், சென்னை, எழும்பூர், வீராசாமி தெருவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வந்தார். இந்நிலையில் தேன்மொழி நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 07.50 மணியளவில் வேலையை முடித்து விட்டு, விடுதிக்கு திரும்புவதற்காக சென்னை சேத்துப்பட்டு இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தேன்மொழி காதலித்த ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற வாலிபர் அவரை பார்க்க வந்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தேன்மொழியை சரமாரியாக வெட்டி விட்டு, வந்து கொண்டிருந்த மின்சார இரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் முதலில் அதிர்ச்சியடைந்து அதன் பின் இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவித்துவிட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தேன்மொழிக்கு பிளாஷ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேன்மொழி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும்போது சுரேந்தரைச் சந்தித்தேன். அவர் வேறு ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். பேருந்தில் எனக்கு அறிமுகமான சுரேந்தர் என்னை காதலிப்பதாகக் கூறினார்.

நானும் அவரைக் காதலித்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் நான் அரசு தேர்வு எழுதினேன். அவர், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைப்பார்த்தார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு வேலை கிடைத்தது. இதன் காரணமாக ஈரோட்டிலிருந்து சென்னை வந்தேன். இதற்கிடையில் தான் அவர் எங்கள் வீட்டிற்கு சென்று என்னை பெண் கேட்டுள்ளார். ஆனால் என் பெற்றோர் சில காரணங்களால் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை, எங்கள் காதலுக்கு ஜாதி தடையாக இருந்தது. இந்தச் சம்பவத்துக்குப்பிறகு என்னை சுரேந்தருடன் பேசக்கூடாது என பெற்றோர் சத்தியம் வாங்கினர். இதனால் அவருடன் பேசுவதை தவிர்த்தேன். இருப்பினும் சுரேந்தர் என்னுடன் பேச பலதடவை முயற்சி செய்தார். ஆனால் நான் கண்டு கொள்ளவில்லை,

கடந்த 13-ஆம் திகதி திடீரென்று போன் செய்த சுரேந்தர் நான் 14-ஆம் திகதி சென்னையில் இருப்பேன், உன்னை பார்க்க வருகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். நான் அன்றைய தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு, விடுதிக்கு செல்வதற்காக இரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது, சுரேந்தர் வந்தார், அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தோம், அப்போது அவர் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியதையே கூறிக் கொண்டிருந்தார். நான் என்னுடைய நிலையை எடுத்து கூறினேன். ஆனால் அவர் திருமணத்தை பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடியாது என்று கூறியவுடன், அவர் அரிவாளை எடுத்து எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசமாக வெட்டினார். இதைக் கண்டு நான் சுதாரிப்பதற்கு அரிவாள் வெட்டு விழுந்துவிட்டது என்று கூறியுள்ளார். காதலான சுரேந்திரர் சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார், அவரிடம் பொலிசார் விசாரித்த போது, தேன்மொழியை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று மட்டும் கூறியுள்ளார்.