கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,17,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனுடைய தாக்கம் எப்படி உள்ளது என்பதை நாம் தினம் தினம் செய்தி மூலமாக, கைபேசி மூலமாக பார்த்து வருகிறோம். மேலும், சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இதனால் நாடு முழுக்க ஊரடங்கு உள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்கள் விருந்து நடத்தி போலீசில் மாட்டுவது தொடர்கதையாக உள்ளது. தொலைக்காட்சிகளில் கறிவிருந்து பற்றிய செய்தி, படம் வருவதால் பலரும் ஆங்காங்கே கறிவிருந்து நிகழ்ச்சியை நடத்தி வேண்டுமேன்றெ சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்கதையாகி உள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கறிவிருந்து கொண்டாடி அதை சமூக ஊடகத்தில் பதிவிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகுளம் பகுதியில் ஊரடங்கை மீறி இளைஞர்கள் ஒன்று கூடி சமபந்தி போஜனம் நடத்தினர். அதை வீடியொவாக எடுத்து பந்தாவாக பதிவிட்டுள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் கிராமத்துக்கு வந்து ஒன்பது பேரை அள்ளிச் சென்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ளவர்களையும் தேடி வருகின்றனர். பந்தாவுக்காக கறிவிருந்து கொண்டாடினோம். இனி இப்படி செய்ய மாட்டோம் என்று போலீசில் சிக்கியவர்கள் கண்ணீருடன் கூறி வருகின்றனர். விசாரித்ததில் அனைவரும் படித்த இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.