நிஜத்தை ஷூட் பண்ணி, வீணா வம்புல சிக்கிக்காதீங்க- சரக்கு படக்குழுவை எச்சரித்த நடிகர் பாக்யராஜ்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் கே. பாக்யராஜ், பின் இயக்குநராகி, பல வெற்றிப் படங்களை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பாண்டியராஜன், பார்த்திபன், லிவிங்ஸ்டன், ஆர்.பி விஸ்வம் போன்றவர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பாடம் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஏழு நாட்கள், மௌன கீதங்கள், சுவரில்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா, முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு போன்ற பல நல்ல படங்களை, ரசிகர்களுக்கு தந்தவர் பாக்யராஜ். இப்போது, நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து, பாக்யராஜ் நடித்து வருகிறார்.நடிகர் மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தை, தயாரித்து இயக்குகிறார். இவர் ஏற்கனவே சில படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். துவக்கத்தில் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடித்து வந்த மன்சூர் அலிகான், கேப்டன் பிரபாகரன் படத்தில், வீரபத்ரன் கேரக்டரில் வில்லனாக நடித்த பிறகு, முக்கிய நடிகர்களில் ஒருவரானார். அதன்பிறகு, பல படங்களில் நடித்துவரும் நிலையில், இப்போது சரக்கு படத்தை தயாரிக்கிறார். இதில் பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் பழ. கருப்பையா, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகையர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் பேசிய பாக்யராஜ், இந்த படத்தில், சிலர் குடித்துவிட்டு ரோட்டில் கிடப்பவர்களை போல வருகிறது. நன்றாக கவனித்துப் பார்த்தால் அவர்கள் நடிப்பது போல அதில் தெரியவில்லை. உண்மையிலேயே குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்களை ஷூட் எடுத்து வைத்துள்ளீர்களா, நாளைக்கு, குடிப்பது என் உரிமை. இதை எதுக்காக படம் எடுத்தீங்க என, எத்தனை பேர் கேஸ் போடப் போகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை, என்றார்.