லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; ஏமாற்றத்தில் ரசிகர்கள், நீடிக்குது மர்மம்

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து வந்து ரசிகர்கள் கலந்துகொள்வதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விழா, திடீரென ரத்து செய்யப்பட்டது, தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமாக செவன்த் ஸ்கிரீன் சேனல் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில், நொந்து போயுள்ளனர்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த லியோ படம், அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடந்து வந்தன. இதில் சிறப்பு அம்சமாக, தமிழகம் முழுவதும் இருந்து, விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்கும் வகையில் தொகுதி வாரியாக 20 டிக்கெட்டுகள் வீதம், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால், இப்போது இசை வெளியீட்டு விழா ரத்து என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்த காரணங்களுக்காகவும், விழாவில் கலந்துகொள்ள அதிகளவில் பாஸ் கேட்டு பலரும், வலியுறுத்தியதாலும் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் புலி வருது புலி வருது கதையாக, விஜய் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசுவாரா, ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதைக்கு விளக்கம் சொல்வாரா, அல்லது சூப்பர் ஸ்டார் யார் எனவும் பேசுவாரா என பல விஷயங்களில் விஜய் கருத்து என்ன என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக காத்திருந்த ரசிகர்கள், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்தில் நொந்து போய்விட்டனர்.